அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - எதிர்பார்ப்பு நடக்குமா?

0 1790

கிழக்கு லடாக்கில் நிலவும் எல்லைப் பதற்றத்தை குறைப்பதற்கான 7 ஆம் கட்ட ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான இந்திய-சீன பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு எல்லையில் பதற்றத்தை குறைக்கவும், படையினரை முழுமையாக வாபஸ் வாங்கவும் பல கட்டங்களாக இந்திய-சீன ராணுவ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அதில் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் பிரச்சனைகளை பேசி தீர்த்து எல்லையில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.

இரு தினங்களுக்கு முன்னர் நடந்த எல்லை விவகாரம் தொடர்பான 19 ஆவது  ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பு அதிகாரிகளும் விவாதித்தனர். அப்போது மாஸ்கோவில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இடையே எட்டப்பட்ட ஒப்பந்த த்தை நடைமுறைப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பாங்கோங் ஏரி, டெப்சாங் ஆகிய இடங்களில்  புதிதாக சீனா எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை என்பதால் இதற்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகள் பலனளித்துள்ளதாக  இந்தியா கருதுகிறது. கடந்த 21 ஆம் தேதி நடந்த ராணுவ மூத்த கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் பற்றி இந்தியாவும், சீனாவும் ஆராய்ந்து அதன் அடிப்படையில், படைகளை முழுவதுமாக வாபஸ் பெறுவது பற்றி வருகிற பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், அசல் கட்டுபாட்டு எல்லை குறித்து 1959 ஆம் ஆண்டு சீனா எடுத்த நிலைப்பாட்டை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள இந்தியா, எல்லைகளை மாற்றும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க கூடாது என்றும் சீனாவை எச்சரித்துள்ளது.

1959 ல் அப்போதைய சீன அதிபர் சூஎன்லாய், இந்திய பிரதமர் நேருவிடம் தெரிவித்த ஒருதலைபட்சமான எல்லை வரையறையை இந்தியா ஒரு போதும் ஏற்கவில்லை என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments