சென்னை வர அதிமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரவு?
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஒருநாள் முன்னதாக சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் இல்லங்களிலும் மாறி மாறி ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன
6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது, வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எம்.பி. தம்பிதுரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதேபோல, அமைச்சர்கள் சி.வி சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு, சி.வி.சண்முகம் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று, எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏக்கள், வரும் 6 ஆம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னர், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
Comments