அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா..!
அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகரும், நம்பிக்கைக்குரிய உதவியாளருமான ஹோப் கிக்சுக்கு (Hope Hicks) நேற்று கொரோனா உறுதியானது. ஓஹியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி தேர்தல் வேட்பாளர் ஜோ பிடனுடன் நடைபெற்ற நேரடி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்தபோது அவருடன் அதே விமானத்தில் ஹோப் கிக்சும் சென்றிருந்தார். இதேபோல் மின்னசோட்டாவில் டிரம்ப் கலந்து கொண்ட தேர்தல் பிரசார நிகழ்ச்சியிலும் ஹோப் கிக்ஸ் கலந்து கொண்டிருந்தார்.
இதை கருத்தில் கொண்டு டிரம்புக்கும், அவருடைய மனைவி மெலனியாவுக்கும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் 2 பேரும் பிறரிடம் இருந்து தங்களைத் தாங்களே சுயதனிமைபடுத்திக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் இன்று மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கும், மனைவி மெலனியாவுக்கும் கொரோனா உறுதியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். சிகிச்சை தொடங்கியுள்ளதாகவும், கொரோனாவில் இருந்து 2 பேரும் விரைவில் மீண்டு வருவோம் எனவும் அந்த பதிவில் டிரம்ப் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் டிரம்பும், மெலனியாவும் கொரோனாவிலிருந்து விரைவில் குணமாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஹோப் கிக்ஸ் குறைந்தது 3 நாள்களாகவே கொரோனாவோடு இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.தற்போது பரிசோதனையில் கொரோனா உறுதியான போதிலும், அவர் கடந்த திங்கள்கிழமையன்றே பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது எனவும், இருப்பினும் புதன்கிழமை வரை எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்திருக்கிறார் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். டிரம்புடன் இந்த வாரம் பயணம் செய்த அனைவரும் 14 நாள்களுக்கு தனிமைபடுத்தப்பட வேண்டும் என ஜார்ஜ் வாசிங்டன் மருத்துவ மையர் நிபுணர் ஜோனோதான் ரெய்னர் குறிப்பிட்டுள்ளார்.
Comments