கோயம்பேட்டில் காய்கறிகளுக்கு செயற்கையாக விலையேற்றம்..! விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றனர்

0 4155
சென்னை கோயம்பேட்டில் 200 மொத்தவிலைக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள், காய்கறிகளின் விலையை இரு மடங்கு கூடுதல் விலை வைத்து விற்று லாபம் சம்பாதித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் 200 மொத்தவிலைக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள், காய்கறிகளின் விலையை இரு மடங்கு கூடுதல் விலை வைத்து விற்று லாபம் சம்பாதித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கொரோனாவை கொண்டு சென்றதில் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு முக்கிய இடம் உண்டு.

இதனால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கோயம்பேடு மார்க்கெட் கூட்டமைப்பு சங்கத் தலைவர் ஜி.டி.ராஜசேகர் ஆகியோரின் அழுத்தம் காரணமாக கோயம்பேட்டிற்கு காய்கறி மார்க்கெட் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருமழிசையில் 68 சங்கங்களை சேர்ந்த வியாபாரிகளுக்கு எப்படி கடை ஒதுக்கப்பட்டதோ, அதே வியாபாரிகளுக்கு மட்டுமே தற்போது கோயம்பேட்டிலும் கடைகள் நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. 2000க்கும் மேற்பட்ட மார்க்கெட் வியாபாரிகள் கடைகளுக்கு அங்கு அனுமதி இல்லை.

திருமழிசையில் வாகனங்களில் நீண்டவரிசையில் காத்திருந்து நொந்து போன சில்லரை வியாபாரிகள், கோயம்பேடு சென்றால் தீர்வு கிடைக்கும் என எண்ணி இருந்த நிலையில், கோயம்பேட்டில் கடை நடத்தும் 68 சங்கங்களின் வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு லாரிகளில் வரும் காய்கறிகளை இரு மடங்கு விலைக்கு விற்று வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

காய்கறிகளை விளைவித்து அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கும் விவசாயிகளுக்கு மிக குறைந்த அளவு விலை கொடுத்து வாங்கும் மொத்த வியாபாரிகள், இரு மடங்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகின்றது.

மேலும் சில்லரை வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் காய்கறிகளை விற்க மறுக்கும் மொத்த வியாபாரிகள், மூடை கணக்கில் விலை வைத்து விற்பதால் மொத்த விலையேற்றமும் அப்படியே காய்கறி வாங்கும் பொதுமக்கள் தலையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் கொடுமை அரங்கேறுகின்றது.

சில்லரை வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு காய்கறிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்று வருவதால் ஒவ்வொரு காய்கறிக்கும் கிலோவுக்கு 20 ரூபாய்முதல் 80 ரூபாய் வரை மக்கள் கூடுதல் விலை கொடுக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய் கிலோ 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், வெண்டை 18 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலும், உருளைக்கிழங்கு 20 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையிலும் புடலங்காய் 25 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

அதிக பட்சமாக ஒரு கிலோ கேரட் 50 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், பீட்ரூட் 25 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையிலும், பீன்ஸ் 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும்
அவரைக்காய் 30ரூபாய் முதல் 75ரூபாய் வரையிலும், தக்காளி 19 ரூபாய் முதல் 50 வரையிலும் நேரத்திற்கு தகுந்தாற்போல விலைவைத்து விற்றுள்ளனர்.

விவசாயிகள் அனுப்பி வைக்கும் லாரிகளை திருப்பி அனுப்பியும் தட்டுப்பாடு என்று கொள்ளை லாபம் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த செயற்கையான விலையேற்றத்திற்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகளும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டும் சில்லரை வியாபாரிகள், மணிக்கணக்கில் டாடா ஏஸ் வாகனங்களுடன் மார்க்கெட்டிற்கு வெளியே காத்திருப்பதால் அதற்கும் சேர்த்து காய்கறியில் விலை ஏற்றக்கூடிய நிலை ஏற்படுள்ளது என்கின்றனர்.

அதே நேரத்தில் கடுமையான மழைக் காலத்தில் கூட சென்னையில் உயராத காய்கறியின் விலை, வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் அமைப்புக்கு 3 கடை என அனுமதி பெற்று மக்கள் பணத்தை வாரிச்சுருட்டி வருவதை தடுத்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments