மக்களை சந்தோஷப்படுத்திய  வால்ட் டிஸ்னி...  கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்!

0 4285
டிஸ்னி பூங்கா

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகக் கடுமையாக நஷ்டமடைந்துள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம், 28,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மற்றும் பாரிஸ், ஷாங்காய், ஹாங் காங், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னியின் பூங்காக்கள் உலகப் புகழ்பெற்றவை. கொரோனா நோய் பரவல் காரணமாக, இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தே வால்ட் டிஸ்னியின் பூங்காக்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. தற்போது கலிபோர்னியா தவிர மற்ற பகுதிகளில் அமைந்துள்ள கேளிக்கைப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், அங்கு பார்வையாளர்கள் சமூக இடைவெளியுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர்.

பல மாதங்களாகப் பூங்காக்கள் பூட்டியே கிடப்பதால், டிஸ்னி நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 34,800 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் அடைந்துள்ளது. இந்த நஷ்டம் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என்று டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வால்ட் டிஸ்னி நிறுவனம் செலவைக் குறைக்கும் நோக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சுமார், 28,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து,  டிஸ்னி நிறுவன கேளிக்கைப் பூங்காக்களின் தலைவரான ஜோஷ் டி அமாரோ,  “கொரோனா தொற்றுநோய் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. அதனால், குறைந்த பணியாளர்களைக்கொண்டே பூங்காக்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம் . கேளிக்கைப் பூங்காக்கள், உல்லாச விடுதிகள் உள்ளிட்ட  அனைத்து பிரிவுகளிலும்  பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் மிகக் கடுமையான முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments