உடலில் 3 மாதத்திற்கு நோய்க்கிருமி இருக்கும்... கொரோனா ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில், 90 நாட்கள் வரை நோய்க்கிருமி இருக்கும் என தெரியவந்துள்ளது. அவர்கள் மூலமாகவே நோய்த்தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களை கொன்று குவித்துள்ள, கொரோனா வைரசை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல்வேறு ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றால் லேசான அல்லது மிதமான அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து 10 நாட்களில் குணமடைந்தாலும், 20 நாட்கள் வரை அவர்களுக்குள் நோய்க்கிருமி இருக்கும் என தெரிவிக்கபப்ட்டு உள்ளது.
அதேசமயம், நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தவர்களின் உடலில், கொரோனா வைரஸ் கிருமி 90 நாட்கள் வரை நிலைத்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நபர்கள் மூலமாகவே கொரோனா தொற்று அதிகளவில் பரவுவதாகவும், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு வெறும் 15 நிமிடங்களில் நோய்த்தொற்று பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நோய்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை தற்போது அதிகபட்சம் 15 நாட்கள் தனிமைப்படுத்தும் நிலையில், தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் முறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு மேற்ப்பட்டவர்களே அதிக அளவில் உயிரிழப்பதாகவும், மாஸ்க் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதே உலக அளவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உள்ள சிறந்த வழிமுறை என கூறும் ஆராய்ச்சியாளர்கள், அதனை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும், அறிவுறுத்தியுள்ளனர்.
Comments