பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு.. கடத்தி வந்த இருவர் கைது..!
பெங்களூரில் இருந்து பெண் குழந்தையைக் கடத்தி வந்த தம்பதியர் எனக் கூறப்படும் இருவரைக் களியக்காவிளையில் தமிழகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையை அழைத்துச் செல்வதற்காகப் பெங்களூரைச் சேர்ந்த தாய் நாகர்கோவிலுக்கு விரைந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழகப் பகுதியில் இருந்து கேரளத்துக்குச் செல்ல முயன்ற தம்பதியரிடம் இருந்த பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அதில் அந்த ஆண் திருவனந்தபுரம் காட்டாக்கடையைச் சேர்ந்த ஜோசப் ஜான் என்பது ஆதார் மூலம் தெரியவந்தது.
அந்தப் பெண் குழந்தையைப் பற்றி அவர்களிடம் இருந்த சிறுவனிடம் விசாரித்ததில் பெங்களூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த குழந்தைக்குக் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துக் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
சிறுவன் ஜான் தன் மகன் எனக் கூறி ஜோசப் ஜான் ஆதார் அட்டை எடுத்திருந்தாலும் அவனையும் கடத்தி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு குழந்தைகளையும் நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
குழந்தை கடத்தப்பட்டது குறித்துப் பெங்களூர் காவல்துறையினருக்குக் கன்னியாகுமரி காவல்துறையினர் தகவல் அளித்தனர். இதையடுத்து அந்தக் குழந்தையின் பெயர் லோகிதா என்பதும், பெங்களூர் பேருந்து நிலையத்தில் குழந்தை காணாமல் போனது குறித்துத் தாய், காவல்துறை மூலம் சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்திருந்ததும் தெரியவந்தது.
தகவல் அறிந்த தாய் தனது குழந்தையை அழைத்துச் செல்வதற்காகப் பெங்களூர்க் காவல்துறையினருடன் நாகர்கோவிலுக்குப் புறப்பட்டுள்ளார். ஜோசப் ஜானுடன் வந்த பெண் தெலுங்கு மொழி பேசுவதால் அவர்கள் இருவரும் தம்பதியரா என்றும், குழந்தைக் கடத்தல் கும்பலுடன் அவர்களுக்குத் தொடர்புள்ளதா என்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Comments