நடிகை சஞ்சனா கல்ராணியிடம் சிறையில் விசாரணை
போதைப்பொருள் புகாரில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியிடம், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகார் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடிகைகள் இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கு வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், சக கைதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டு உணவை வழங்க தடை விதிக்கப்பட்டதோடு, சிறை உணவே தற்போது வழங்கப்படுகிறது.
இதனிடையே சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பிட்காயின் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை சஞ்சனாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே நடிகைகள் இருவரும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும், நீதிமன்ற அனுமதியின் பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பெங்களுருருவில் போதைப்பொருள் விற்றதாக அண்மையில் கைது செய்யப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் சஞ்சனாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது தெரிய வந்ததால், அவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments