பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உள்ளிட்ட 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில்16 பேர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே, வழக்கை தினசரி நடத்தி இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்குமாறு, கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாபர் மசூதி தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை ஒட்டி, 28 ஆண்டுகால வழக்கில் நீதிபதி எஸ்.கே.யாதவ் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Comments