வேளாண் சட்டங்கள் மூலம் கருப்பு பணத்தை உருவாக்கும் மற்றொரு வழியும் அடைக்கப்பட்டது - பிரதமர் மோடி..!
வேளாண் சட்டங்கள் மூலம் கருப்பு பணத்தை உருவாக்கும் மற்றொரு ஆதாரத்தை மத்திய அரசு அடைத்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரம் சார்ந்த பல சீர்திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த சீர் திருத்தங்கள், உழவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், மகளிருக்கு நலம் பயக்கும் என்றும், ஆனால் சிலர் இதனை எதிர்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
விவசாயிகள் வழிபடும் உழுபடை கருவிகளான டிராக்டர் போன்றவற்றை தீயிட்டு கொளுத்தி சிலர், விவசாயிகளை அவமதிப்பாக அவர் புகார் கூறினார். எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக குறைந்தபட்ச ஆதாரவிலை திட்டத்தை அமல்படுத்துவதாக கூறியதாகவும், ஆனால் பா.ஜ.க. அரசு தான் அதனை அமல்படுத்தி உள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.
சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக கூறிய அவர், விளை பொருட்களை எங்கும் விற்பனை செய்யலாம் என்று விவசாயிகளுக்கு மத்திய அரசு சுதந்திரம் அளித்துள்ளது என்றார். இந்த சுதந்திரத்தை சிலரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை என்றும், கருப்பு பணத்தை உருவாக்க அவர்களுக்கு இருந்து மற்றொரு வழியையும் மத்திய அரசு அடைத்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் ராணுவத்தை பலப்படுத்த எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்ற மோடி, ரபேல் விமானத்தின் தேவை குறித்து விமானப்படை கூறியதையும் அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றார். ஆனால் பாஜ.க அரசு ரபேல் விமானத்தை வாங்க முடிவு செய்த போது, அதில் ஏதோ தவறு நடைபெற்று விட்டதாக சிலர் பிரச்சனையை உருவாக்க பார்த்ததாக அவர் கூறினார்.
ஒற்றுமையின் சின்னமாக சர்தார் படேல் சிலை அமைக்கப்பட்டதாக கூறிய பிரதமர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் இன்னமும் அந்த சிலையைக் கூடசென்று பார்க்கவில்லை என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது கங்கை அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாள் ஒன்றிற்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது, ஹரித்வார்-ஜெக்தீப்பூரில் நாள் ஒன்றிற்கு 27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துவது, சரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்திற்கான கட்டுமானம் பணி உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
Comments