கூட்டு பாலியல் வழக்கில் தேடப்பட்ட நபர், போலீசாரிடம் சிக்கி தப்பிய அதிர்ச்சி..!
சென்னையில் தாயின் கண்முன்னே மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில், இரு மாதங்களாக தேடப்பட்டு வந்த ரவுடி போலீசாரிடம் சிக்கியும், பெயரை மாற்றி கூறி தப்பித்து ஓடிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கையில் கிடைத்த ரவுடியை போலீசார் கோட்டை விட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
2 மாதத்திற்கு முன்பு சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் தாயின் கண்முன்னே மாற்றுத்தினாளி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைதான நிலையில், தலைமறைவான பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி லிங்கத்தை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே, திங்கட் கிழமை இரவு பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்த ரவுடி லிங்கத்தின், உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், தனது பெயரை கணேசன் என மாற்றிக்கூறிய லிங்கம், குடும்பத்தினரை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வந்ததாகவும், நண்பருடன் சேர்ந்து செனாய் நகர், பகவதி அம்மன் கோவில் அருகே கஞ்சா வாங்க சென்ற போது சிலர் தாக்கியதாகவும் கூறியுள்ளான்.
அவன் அளித்த தகவல் அடிப்படையில் தாக்குதல் கும்பலை பிடித்து விசாரணை நடத்திய போது தான் மருத்துவமனையில் இருப்பது கணேசன் இல்லை ரவுடி லிங்கம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கூட்டாளிகள் கைதானதும் மும்பைக்கு தப்பித்து ஓடிய லிங்கம் மீண்டும் சென்னை வந்த நிலையில், கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவன் மீது தாக்குதல் நடந்தது தெரியவந்தது.
இதற்கிடையே, மீண்டும் லிங்கத்தை கைது செய்ய போலீசார் மருத்துவமனைக்கு சென்ற போது, அவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். கையில் கிடைத்த ரவுடியை போலீசார் தவற விட்டதை அடுத்து அவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Comments