மதுரையில் காணாமல் போன மரகதலிங்கம்... ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை!

0 5990
காணாமல் போன மரகத லிங்கம்

துரையில் பலகோடி ரூபாய் மதிக்கத்தக்க, பழைமையான மரகதலிங்கம் காணாமல் போன வழக்கு விசாரணை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள குன்னத்தூர் சத்திரத்தில், இரண்டரை அடி உயரம் கொண்ட அபூர்வமான மரகத லிங்கத்தைப் பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில், குன்னூர் சத்திரம் பாழ்பட்டிருந்ததால், அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டுப் புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2006 - ம் ஆண்டு குன்னூர் சத்திரம் இடிக்கப்பட்டது. அப்போது பலகோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம் மற்றும் பழைமையான பொருள்கள் அனைத்தும் ராணி மங்கம்மாள் சத்திரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த நிலையில், மங்கம்மாள் சத்திரத்திலும் பராமரிப்புப் பணி நடைபெற்றதால் மரகத லிங்கம் மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்குச் சொந்தமான கருவூலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே, கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மரகத லிங்கம் காணாமல் போனதாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான முத்துக்குமார் என்பவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கினை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மரகதலிங்கம் தொலைந்து போனது தொடர்பான ஆர்டிஐ கேள்விக்கு ஆணையராக நடராஜன் இருந்தபோது மரகதலிங்கம் இருந்ததாகவும், ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் மாநகராட்சியிடம் இல்லை எனவும் பதில் அளித்திருந்தார். இதற்கிடையே சிலை காணாமல் போனது தொடர்பாகக் கடந்த 2013 ம் ஆண்டு மாநகராட்சி உதவி ஆணையர் தலைமையிலான 6 அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments