மத்திய அரசின் விவசாய சட்டங்களை சொந்த நலனுக்காகவே எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
விவசாயம் தொடர்பான மத்திய அரசின் சீர்திருத்தங்களை சொந்த நலனுக்காகவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கையால் கருப்பு பணத்துக்கான ஆதாரத்துக்கு தடை போடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தின்கீழ் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நாளொன்றுக்கு 68 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்தப்படுத்தும் ஆலை, ஏற்கெனவே இருக்கும் சுத்திகரிப்பு ஆலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரமாண்ட திட்டங்களை டெல்லியிலிருந்தபடி காணொலி மூலம் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய மசோதாக்களால் நாட்டிலுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளம்தலைமுறையினர் பெரிதும் பயனடைவர் என்றார்.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தில் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டிய மோடி, மத்திய அரசின் நடவடிக்கையால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையோடு, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்களது பொருள்களை விற்கும் சுதந்திரம் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
Comments