வெளியே வந்தால் காட்டுமாடு... இப்போது செல்ஃபியும் எடுக்குறாங்க!- இது குன்னூர் கலாட்டா
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊருக்குள் காட்டு மாடுகள் சுற்றி திரிவதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சில இளவட்டங்கள் அவற்றுடன் செல்ஃபி எடுக்க முனைவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டுமாடுகள்தான் முக்கிய அடையாளங்கள். அதனால், இந்த மலை மாவட்டத்தில் மனித - விலங்கு மோதல்களும் அதிகம் நிகழ்கிறது. இதனால், ஏராளமான உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரரான குன்னூருக்குள் காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் தற்போது காட்டெருமைகள் ஊருக்குள் ஆங்காங்கே ஜாலியாக வாக் வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊருக்குள் அடிக்கடி காட்டுமாடுகள் வலம் வருவதும் பிறகு அவற்றை வனத்துறை ஊழியர்கள் விரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. சில சமயங்களில் தெருவில் நடந்து செல்லும் மனிதர்களை காட்டுமாடுகள் முட்டியும் விடுகின்றன. வாகன ஓட்டிகளும் ஒரு வித பயத்துடனையே செல்ல வேண்டியது உள்ளது. தற்போது, குன்னூரில் வீட்டுக்கருகிலேயே காட்டெருமைகள் சுற்றி திரிகின்றன. அங்கேயே நீண்ட நேரம் நின்று புல் மேய்கின்றன. இதனால், குன்னூர் மக்கள் ஒரு வித அச்சத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது.
கதவை திறந்தால் கட்டுமாடு என்கிற நிலையில் தற்போது குன்னூர் நகரம் உள்ளது. சில இளவட்டங்கள் காட்டெருமைகளுடன் செல்ஃபி எடுக்க முனைவதால், உயிர்ப்பலி ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே, குன்னூர் நகருக்குள் காட்டுமாடுகள் வருவதை தடுக்க நிரந்தரமாக நடவடிகை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments