மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக செயற்குழு தீர்மானம்..!
கொரோனா தடுப்புப் பணிககான நிதியையும், வரி வருவாயில் தமிழகத்தின் பங்கையும் உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியைத் தமிழகத்துக்கு வழங்கவும், சரக்கு சேவை வரி வருவாயில் தமிழக அரசுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை, பல்வேறு திட்டங்களுக்கான மானியத்தொகைகளை உடனடியாக வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என்றும், நீட் தேர்வு முறையைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி பற்றி மறு ஆய்வு செய்ய அமைத்துள்ள வரலாற்று அறிஞர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்கவும், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கவும், இலங்கைத் தமிழர் நலன் காக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments