ஒரே வீட்டில் வசித்தாலும் பேசாத மனைவி குழந்தைகள்... மகள்கள் தினத்தில் மனம் உடைந்த தந்தை தற்கொலை!
சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் மனைவி, குழந்தைகள் பேசாததால் மகள்கள் தினத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்பதோடு, பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சித்ரா செல்வி என்ற மனைவியும் ஜஸ்வந்த் ரத்னம் என்ற மகனும் நேத்ரா என்ற மகளும் உள்ளனர். சித்ரா செல்வி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சிவப்பிரகாசமும் சித்ரா செல்வியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் அன்பான காதல் வாழ்க்கையின் அடையாளமாகவே இரு குழந்தைகளும் பிறந்தனர். இதற்கிடையே, சிவப்பிரகாசத்துக்கு மதுப் பழக்கம் தொற்றி கொண்டுள்ளது. இதனால், குடும்பத்தில் புயல் அடிக்கத் தொடங்கியது. அடிக்கடி, மது அருந்திய காரணத்தினால் மனைவிக்கும் கணவனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
இதனால், கடந்த மூன்று வருடங்களாக ஒரே வீட்டில் வசித்த நிலையிலும் சித்ரா செல்வியும் அவரின் மகனும் சிவப்பிரகாசத்திடம் பேசாமல் ஒதுங்கியே இருந்துள்ளனர். மகள் நேத்ரா மட்டும் தந்தையிடம் பேசுவாராம். இருவரையும் சமாதானப்படுத்த பல முறை உறவினர்கள் முயன்றும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த நிலையில், சிவப்பிரகாசத்தின் மனைவி சித்ரா செல்வி, தன் மகள் நேத்ராவை அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு 10 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளார். வீட்டில் சிவப்பிரகாசம் அவரின் மகன் ஜஸ்வந்த் ரத்னம் மட்டும் இருந்துள்ளனர். மகள்கள் தினமான செப்டம்பர் 27 - ஆம் தேதி தன் மகள் நேத்ராவிடத்தில் பேச சிவப்பிரகாசம் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், பேச முடியவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, மனம் வேதனையடைந்த சிவப்பிரகாசம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக நொளம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...
Comments