அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுதீ... வீரர்களுடன் களமிறங்கிய சிறைக்கைதிகள்!
அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க வீரர்களுடன் சிறைக் கைதிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் உள்ள கலிபோர்னியா, ஓரிகன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் காட்டுத் தீ வேகமாகப் பரவிவருகிறது. கடந்த இரண்டு மாதத்துக்கும் மேல் எரிந்துவரும் காட்டுத் தீயால் இதுவரை 25 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்துள்ளன. முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் அமெரிக்க அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நாபா பள்ளதாக்கில் கிளாஸ் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையுடன் எரியும் காட்டுத் தீயே கிளாஸ் காட்டுத் தீ என்று அழைக்கப்படும். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திராட்சை தோட்டங்கள் நிறைந்த நாபா பள்ளத்தாக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், செயின்ட் ஹெலினா என்ற இடத்தில் காட்டுத்தீயால், ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அந்தப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
காட்டுத் தீ ஏற்படுவது குறித்து அமெரிக்க தேசிய வானிலை மையம், “குறைவான ஈரப்பதம், காய்ந்த சருகுகள் மற்றும் வேகமாக வீசும் காற்று ஆகியவை வனப்பகுதிகளில் தீவிபத்து ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்களுடன் சிறைக் கைதிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments