அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக செயற்குழு கூடியுள்ளது. கொரோனா தடுப்புப் பணிக்கு நிதியுதவி வழங்கவும், சரக்கு சேவை வரி வருவாயில் தமிழகத்துக்கான நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது, உட்பட 15 தீர்மானங்கள் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு கூட்டத்துக்குப் புறப்படுமுன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று சந்தித்தார்.
பிறகு வீட்டு முன்பு காத்திருந்த வடபழனி முருகன்கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ஆகியவற்றின் குருக்கள் கோவில் பிரசாதங்களைத் துணை முதலமைச்சருக்கு வழங்கினர்.
இல்லத்தின் முன் கூடியிருந்த ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் சென்று அவரைச் சந்தித்தனர்.
இதனை தொடர்ந்து செயற்குழுக் கூட்டத்துக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதே போல் முதலமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்த போதும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டுச் செயற்குழுக் கூட்டத்துக்குச் சென்றனர்.
அதிமுக செயற்குழுவில், கொரோனா தடுப்புப் பணிகள், நிவாரணப் பணிகள் ஆகியவற்றுக்குத் தேவையான நிதியைத் தமிழகத்துக்கு வழங்கவும், சரக்கு சேவை வரி வருவாயில் தமிழக அரசுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை, பல்வேறு திட்டங்களுக்கான மானியத்தொகைகளை உடனடியாக வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என்றும், நீட் தேர்வு முறையைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும்,காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி பற்றி மறு ஆய்வு செய்ய அமைத்துள்ள வரலாற்று அறிஞர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்கவும், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கவும், இலங்கைத் தமிழர் நலன் காக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வெள்ளி வாள் அளித்து அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை வழிநெடுகிலும் ஓ.பி.எஸ். வந்த கார் மீது மலர்களை தூவியும், பூ மாலை கொடுத்தும் வரவேற்றனர். மேலும் ஓ.பி.எஸ். முகம் பொறித்த முகமூடிகளையும் அவர்கள் அணிந்திருந்தனர்.
முன்னதாக ஓ.பி.எஸ். இல்லத்தில் இருந்து புறப்பட்ட போது, "அம்மாவின் நிரந்தர அரசியல் வாரிசு" என்றும் "அதிமுகவின் பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ்" என்றும் கோஷங்களை எழுப்பி விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
செயற்குழுக் கூட்டத்துக்கு முன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்துச் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments