'தயவுசெய்து காயப்படுத்தாதீர்கள்! '- எஸ்.பி.பி மருத்துவ கட்டணம் தொடர்பாக சரண் விளக்கம்!

0 30115

ணையத்தில் வைரலாகி வரும் எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் சர்ச்சை தொடர்பாக எஸ்பிபி சரண் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனைக் கட்டுவதற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பின்பு, எஸ்பிபியின் மகன் குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்று செய்திகளைப் பரப்பினார்கள். இது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

''அப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள்.

இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கையைத் தரப்போகிறோம். இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தத்தைத் தருகிறது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக்குச் செல்வது போலவே இல்லை. வீட்டுக்குச் சென்றுவருவது போலத்தான் இருந்தது. மருத்துவமனைக்குச் சென்றது, மருத்துவர்களைச் சந்தித்தது, அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களைச் சந்தித்தது என அத்தனையையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

ஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அப்பாவுக்கான சிகிச்சைக்கு ஒரு கருவி தேவைப்பட்டபோது எம்ஜிஎம் தரப்பு அப்போலோ மருத்துவமனையைக் கேட்டது. அவர்கள் உடனடியாகத் தந்து உதவினார்கள் என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சரண், தனது தந்தைக்கு எவ்வள செலவு செய்யப்பட்டது என்பதை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றுகூறினார். மேலும், இறுதிச் சடங்குக்கு நடிகர் அஜித் வராதது குறித்த கேள்விக்கு, அவர் தனது நல்ல நண்பர் எனவும், நேரில் வராவிட்டாலும் வீட்டிலிருந்து வருத்தப்பட்டு இருப்பார் என்றும் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments