கோயம்பேடு காய்கறிச் சந்தை மீண்டும் திறப்பு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
கொரோனா அதிகளவில் பரவியதால், தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு சந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. தற்காலிகமாக இந்தச் சந்தை திருமழிசைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக சந்தை முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
முதற்கட்டமாக 194 மொத்த விற்பனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வளாகத்தினுள் ஒரே நேரத்தில் 250 டெம்போக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படும்.
சரக்குகளை இறக்க இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் காய்கறி வாங்க அதிகாலை 1 மணி முதல் காலை 9 வரை மட்டுமே வரலாம் என்றும், பொதுமக்கள் யாரும், வரவேண்டாம் என வியாபாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் வியாபாரிகளின் பலத்த ஆரவாரத்திற்கு இடையே கடைகள் திறக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக காய்கறிகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வந்த வாகனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
வாகன ஓட்டுநர் அனைவரும் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், அரசு எவ்வளவோ எடுத்துக் கூறியும் வியாபாரிகள் சிலர் தனிநபர் இடைவெளியை காற்றில் பறக்க விட்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.
கொரோனா பரவலைத் தடுக்க அரசின் அறிவுறுத்தலை வியாபாரிகளும், தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தையில் காலை முதலே அதிகளவில் சிறு வியாபாரிகள் கூடியதால், வாகன நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி காலை 9 மணியுடன் நுழைவாயில்கள் அடைக்கப்பட்டன. இதனிடையே அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்ய முயன்ற 15க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இடத்தையும் பூட்டினார்கள். மேலும் விதிகளை மீறும் வாகனங்கள், வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Comments