அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர் இடைவெளியைப் பின்பற்றும் வகையில் மூன்று இடங்களில் உறுப்பினர்கள் அமரவைக்கப்படுவார்கள். மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சி அலுவலகத்தின் முதல்தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமை நிர்வாகிகள், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தித்தொடர்பாளர்கள் அலுவலகத்தின் பின்புறம் அமர வைக்கப்படுவார்கள். அலுவலகத்தின் பக்கவாட்டில் உள்ள அறையில் மகளிர் உறுப்பினர்கள் மற்றும் பிற மாநில உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பின்னரே கூட்டத்திற்கு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அலுவலக வாயிலில் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படும். அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், அதற்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியைத் தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்ட அரசுக்கு பாராட்டுத் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments