திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதித்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் பெரியாரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலை மற்றும் பீடத்தின் மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு மாலை அணிவித்தும் அவமதித்ததாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து வந்த போலீசார், தண்ணீரை ஊற்றி சிலையை சுத்தம் செய்தனர்.
இதனிடையே, மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திராவிட கழகத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், தமிழ் இனத்தின் தலைவரான பெரியாரை அவமதிப்பதாக நினைத்து, அவர்கள் தங்களை தாங்களே அவமதித்துக் கொள்வதாக முகநூலில் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இது போன்ற செயல்களை செய்வதின் மூலம், மக்களிடம் இருந்து அவர்கள் புறக்கணிக்கப்படுவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நிகழ்விடத்திற்கு சென்ற, மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், திருச்சி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
Comments