எஸ்.பி.பி - திறமையை கண்டறிந்தவர் கே.வி. மகாதேவன்... பயன்படுத்தி கொண்டவர் எம்.ஜி.ஆர்! 'ஆயிரம் நிலவே வா' பிறந்த கதை
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திறமையை திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அறிந்து மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் அழைத்துச் சென்றார்.
அப்போது ஆயிரம் நிலவே வா பாடலுக்கு எஸ்.பி.பியை பாட வைத்தார் எம்ஜிஆர். கேவி மகாதேவன் இசையில் எஸ்.பி.பி. பல இனிமையான பாடல்களை அளித்துள்ளார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியுடன் எஸ்.பி.பி இணைந்து பாடிய போது அது ஒரு தனி சகாப்தமாக உருவானது. இருவரும் பல நூறு பாடல்களை ரசிகர்களுக்கு தந்து மகிழ வைத்தனர்.
விஜயபாஸ்கர், வி,குமார், சங்கர் கணேஷ், தேவா, தீனா , பரத்வாஜ் உள்பட ஏராளமான இசையமைப்பாளர்களுக்காக எஸ்.பி.பி பாடியிருக்கிறார்.
அந்த பாடல்களும் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள எஸ்.பி.பியின் குரல் நுட்பம் ஒரு முக்கியக் காரணமாகும்.
இளையராஜாவுடன் எஸ்.பி.பி. இணைந்து பாடிய போது இரண்டாவது இன்னிங்ஸ் உருவானது. இருவரும் இணைந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான அபாரமான பாடல்களை அளித்துள்ளனர்
டி.ராஜேந்தர் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் புதியதொரு வானத்தின் புதிய விடியலைப் போல புத்தம் புதிதாக இருந்தன.
ஏ.ஆர். ரகுமான் இசையில் புதிய பாடகர்கள் பலர் இடம் பெற்றதால் எஸ்.பி.பிக்கு குறைவான பாடல்களே கிடைத்தன. ஆனால் அந்த சில பாடல்களும் சாகா வரம் பெற்றுவிட்டன
இந்தியின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு குரல்களை நாடி வந்தனர்.
ஜேசுதாசைத் தொடர்ந்து ஏராளமான இந்திப் படங்களிலும் எஸ்.பி.பியை பாட அழைத்தனர். பப்பி லகரி, ஆர்.டி.பர்மன், லட்சுமிகாந்த் பியாரேலால், நதீம் சரவண், ராம் லக்ஷ்மண் போன்ற இசையமைப்பாளர்களுக்காக எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மொழியைக் கடந்தும் முன்னால் வந்து நிற்கின்றன.
தாமே 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையின் நுணுக்கங்களை நன்கு அறிந்ததால்தான் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்களின் பிரியத்துக்குரிய பாடகராகத் திகழ்ந்தார்.
Comments