லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை... தப்பி ஓட முயன்ற பத்திர பதிவு அலுவலரால் பரபரப்பு!
திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் கணக்கில் வராத ரூ. 1,43, 330 பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீரென்று லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பதறி போன ஊழியர்கள் கணக்கில் வராத பணத்தை அலுவலகத்தில் ஆங்காங்கே கீழே போட்டனர். பத்திர பதிவு ஆவணங்களிலும் ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம், மற்றும் அலுவலகத்தின் தரையில் கிடந்த நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சேகரித்தனர்.
சோதனை நடந்த சமயத்தில் பத்திரப் பதிவு அலுவலர் திருமலை ஸ்ரீதர் அலுவலகத்தில் காரில் தப்பி ஏறி செல்ல முயன்றார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். காரையும் சோதனையிட்டு அதிலிருந்த ஆவணங்களையும் கைப்பற்றி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முறைகேடான வகையில் பத்திரப்பதிவு நடைபெற்றதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கணக்கில் வராத ரூ. 1,43, 330 லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து சென்றனர் இதனால், திருக்கழுக்குன்றம் பகுதியில் மாலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
Comments