நடிகை ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் சப்ளையர்களின் பினாமியாக செயல்பட்டிருப்பதற்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகைகள் இருவருக்கும், கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் சப்ளையர்கள், வீடு, பரிசுகள் என அன்பளிப்புகளை அள்ளி வழங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில், பணமோசடி, சட்ட விரோத பணப்பரிமாற்றம் என்ற கோணத்தில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா, ராகிணியின் கூட்டாளி ரவி சங்கர், சஞ்சனாவின் நண்பரும் ரியல் எஸ்டேட் அதிபருமான ராகுல் டோன்ஸ் (Rahul Tonse), போதைப்பொருள் சப்ளையர் விரேன் கண்ணா (Viren Khanna) ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த அமலாக்கத்துறையினர், அதற்காக போதைபொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தை நாடினர்.
இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றதை அடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று நடிகைககள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
அதேசமயம், நடிகைககள் இருவரின் ஜாமீன் மனுவும் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணை வளையத்தில் இருந்த ஹோட்டல் அதிபர் கார்த்திக்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments