கோலம் போட்ட பெண்ணை… கொன்று போட்ட விஜய் ரசிகர்..! ல்தகா சைஆவால் பயங்கரம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகாலையில் கோலம் போட வீட்டில் இருந்து வெளியில் சென்ற தலைமை ஆசிரியர் மனைவி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலுக்கு இடையூறாக இருந்ததால் நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு
மயிலாடுதுறை மாவட்டம். சீர்காழி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்தஜோதி, அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவரது மனைவி சித்ரா. இவர் கடந்த 18ந்தேதி கோலம் போட வெளியில் சென்ற போது அங்கு இரும்பு குழாயுடன் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் , சித்ராவை தலையில் சராமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
பக்கத்து வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையை முன்னெடுத்தனர் காவல்துறையினர்.
சித்ரா அதிகாலையில் கோலம் போடவரும் தகவல் கொலையாளிக்கு முன் கூட்டியே தெரிந்தது எப்படி ? ஒருவேளை கொலையாளி ஏற்கனவே அறிமுகமான நபராக இருக்கலாமோ ? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிருந்தா என்ற பெண்ணை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
பிருந்தாவிற்கு 3 வயதில் குழந்தை உள்ள நிலையில் அவரது கணவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருவதும், பிருந்தாவை தேடி எம்.சாண்ட் வியாபாரம் செய்யும் செய்யது ரியாஸ் என்ற இளைஞர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரியாஸை பிடித்து விசாரித்த போது, பிருந்தாவின் தந்தை டைல்ஸ் ஒட்டும் வேலையை ஒப்பந்தம் எடுத்து செய்துவருவதால் அது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கலுக்காக பிருந்தாவீட்டுக்கு வந்து சென்றதாக தெரிவித்தார்.
இருந்தாலும் காவல்துறையினர் பிருந்தா மற்றும் ரியாஸ் ஆகியோரின் செல்போன் தொடர்பு விவரங்களை சேகரித்த போது இருவரும் இரவில் கூட பலமணி நேரம் செல்போனில் பேசி இருப்பதையும், சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவிலும் இருவரும் நீண்ட நேரம் பேசி இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சித்ரா கொலைக்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது. செய்யது ரியாஸ் நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தவர் என்றும் அவர் பங்குதாரராக இருந்த கணினி பயிற்சி மையத்திற்கு வந்து சென்ற போது பிருந்தாவுடன் ரியாசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் பிருந்தாவுக்கு வேறொரு இளைஞருடன் திருமணமான நிலையில் காதல் முறிந்துள்ளது. சில ஆண்டுகள் கழித்து தொழில் முறையாக பிருந்தாவின் தந்தை மூலமாக ரியாஸுக்கு மீண்டும் முன்னாள் காதலி பிருந்தாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தலைமை ஆசிரியர் வீட்டில் வாடகைக்கு இருந்த பிருந்தாவின் கணவர் வெளி நாடு சென்று இருந்ததால் பழைய காதல் ஆசையை மீண்டும் புதுப்பித்துள்ளார் ரியாஸ்.
ஆண் துணை இல்லாத வீட்டிற்கு ரியாஸ் வந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியரின் மனைவி சித்ரா, இருவருக்குள்ளும் தவறான தொடர்பு இருப்பதை அறிந்து இருவரையும் கண்டித்துள்ளார். தனது வீட்டிற்குள் வரகூடாது என்று ரியாசை விரட்டியதால், ஆத்திரம் அடைந்த ரியாஸ் சித்ராமீது ஆத்திரத்தில் இருந்துள்ளான்.
காதலியை சந்திக்க தடையாக இருக்கும் சித்ராவை தீர்த்துக் கட்டுவது என்று காதலி பிருந்தாவுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளான் ரியாஸ். தினமும் அதிகாலையில் சித்ரா கோலம் போட தனியாக வெளியே வரும் போது தீர்த்துக்கட்டிவிடலாம் என்று பிருந்தா போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி இருமுறை அவரை அடித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் தாக்குதல் திட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 18 ந்தேதி இருட்டாக இருந்த சமயத்தில் கோலம் போட வெளியே சென்ற சித்ராவை இரும்புக் குழாயால் பயங்கரமாக தாக்கி கொலை செய்து விட்டு ஓடிய ரியாஸ், அக்கம்பக்க்த்து வீடுகளில் உள்ள சிசிடிவிகளாலும், செல்போன் சிக்னல் மூலமும் வசமாக சிக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து ரியாஸ், பிருந்தா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கணவன் வெளி நாட்டில் தங்கி இருந்து, மனைவி குழந்தைகளுக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க, மனக்கட்டுபாடில்லாமல் பழைய காதல் வாழ்க்கையை வாழ நினைத்ததால் கொலைகாரி பட்டத்துடன் குழந்தையை தவிக்கவிட்டு கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிருந்தா என்கின்றனர் காவல்துறையினர்.
Comments