வழிப்பறிக் கொள்ளையர் 10 பேர் கைது : 12 மணி நேரத்துக்குள் பிடிபட்டனர்
சென்னையில் நள்ளிரவு முதல் காலை வரை தொடர்ந்து எட்டு வழிப்பறிகளில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 10 பேரை 12 மணி நேரத்திற்குள் பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் லஸ் அருகே புதன் நள்ளிரவில் பாலாஜி என்கிற ஆட்டோ ஓட்டுநரை இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் வழிமறித்துத் தாக்கி அவரது செல்போனைப் பறித்துச் சென்றனர்.
ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் வாகனத்தில் சென்ற ஜெயஸ்ரீ என்கிற பெண்ணை மிரட்டி மூன்றரை சவரன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். அதே வழிப்பறிக் கொள்ளையர்கள் பீட்டர்ஸ் சாலையில் ராதா என்கிற மூதாட்டியிடம் ஒரு சவரன் நகையைப் பறித்துச் சென்றனர்.
நுங்கம்பாக்கத்தில் ஏழுமலை என்கிற முதியவரிடமும், விக்டர் என்கிற ஓட்டுநரிடமும் செல்போனைப் பறிக்க முயன்று முடியாமல்போகவே அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
பின்னர், சிந்தாதிரிப்பேட்டை டேம்ஸ் சாலையில் முகமது சாகிப் என்பவரையும், ராயபுரத்தில் யூசுப் என்பவரையும் தாக்கி அவர்களின் செல்போன்களைப் பறித்துச் சென்றனர். இறுதியாக வண்ணாரப்பேட்டையில் வீட்டு வாசலைத் தூய்மை செய்துகொண்டிருந்த பொன்னம்மா என்கிற மூதாட்டியைத் தாக்கி 4 சவரன் நகையைப் பறித்துச் சென்றனர்.
நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை அரிவாளால் தாக்கி 8 வழிப்பறிகளில் ஈடுபட்டது ஒரே கொள்ளைக் கும்பல்தான் என்பதைக் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
குற்றவாளிகளான யமகா ராகுல், பரத்குமார் ஆகிய இருவரையும் 12 மணி நேரத்துக்குள் கைது செய்தனர். இவர்கள் வழிப்பறி செய்த பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த கூட்டாளிகளான தனுஷ், சூர்யா, ராகேஷ், ராகுல், கார்த்திக், விஜய் மணிகண்டன், மணி, சஞ்சய் ஆகியோரையும் நேற்று மாலைக்குள் அடுத்தடுத்துக் கைது செய்தனர்.
கொள்ளையர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள், 11 செல்போன்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களைக் காவல்துறையினர் மீட்டனர்.
வழிப்பறிக் கொள்ளைகள் நிகழ்ந்து 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிய தனிப்படையினரைக் காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
Comments