நிறக்குருடு ஏற்பட்டதால் பறிபோன வேலை... அரசுப்பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்த பரிதாபம்
சங்கரன்கோவில் அருகே, கண்ணில் நிறக்குருடு ஏற்பட்டதால், வேலை இழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமரம் பாறை குளத்தைச் சேர்ந்தவர்,செல்வகுமார். தற்போது, 48 வயதாகும் செல்வகுமாருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழக புளியங்குடி பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார் செல்வகுமார். இந்த நிலையில், அவருக்குக் கண் பார்வையில் நிறக்குருடு ஏற்பட்டது. நிறக்குருடு ஏற்பட்டால் நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காண முடியாது.
நிறக்குருடு பிரச்னையால், அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிபவர்கள் பெறவேண்டிய, பார்வைத் திறனுக்கான தகுதிச் சான்றை செல்வக்குமாரால் பெற முடியவில்லை. அதனால், கடந்த ஆறு மாதமாக ஓட்டுநர் பணியில் அமர்த்தப்படாமல் இருந்தார். பிறகு, மாற்றுப்பணி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். கொரோனா காலம் என்பதால் அவரால் சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்று மாற்றுப் பணிக்கான சான்றையும் பெற முடியாமல் தவித்தார்.
இதனால், கடந்த ஆறு மாதமாக வேலை இல்லாததால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இருந்த வேலையையும் இழந்து, மாற்றுப் பணியும் கிடைக்காத விரக்தியிலிருந்த செல்வகுமார் மனமுடைந்த வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டார். தகவலறிந்த குடும்பத்தினர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உரிய நேரத்தில் அதிகாரிகள் மாற்றுப் பணி வழங்கியிருந்தால் செல்வகுமாரின் தற்கொலையைத் தடுத்திருக்கலாம் என்று செல்வகுமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments