கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, முன்கூட்டியே நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடர்..!

0 1229
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே முடிவடைந்தது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே முடிவடைந்தது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக எம்பிக்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 14ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. சுழற்சி முறையில் நடைபெற்ற கூட்டத்தில் காலையில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் கூடியது.

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டன. அவைத் துணைத் தலைவருக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டு, அவரை முற்றுகையிட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடந்த செவ்வாய் முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களையும் புறக்கணித்தனர்.

10 நாட்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அவை நடவடிக்கையில் கலந்து கொண்டவர்களில் அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட சுமார் 25 எம்பி.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், அக்டோபர் 1 வரை மழைக்கால கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே முடித்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நேற்று கூடிய மாநிலங்களவையில் நிதி ஒதுக்கீடு மசோதாக்கள், ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழி மசோதா, தொழிலாளர் சட்டவிதிகள், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் பதவிக்காலம் முடிவடையும் 11 எம்.பிக்களுக்கு பிரிவுபச்சாரம் அளிக்கப்பட்டு, மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். கடந்த 2 நாட்களில் மட்டும் மாநிலங்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களவையில் புதன்கிழமை முக்கிய துறைமுகங்கள் நிர்வாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

மழைக்கால கூட்டத்தொடரில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தலா 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments