வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடிவு - கேரள அமைச்சர்
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளதாகக் கேரள வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது குறித்துச் சட்ட வல்லுநர்களுடன் கேரள வேளாண்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணைப்படி வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் வருவதாகவும், அதை மத்திய அரசு எடுத்துக்கொண்டது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
வேளாண் மசோதாக்களைக் கொண்டுவருமுன் மத்திய அரசு எந்தவொரு மாநிலத்துடனோ, விவசாய சங்கங்களுடனோ கலந்தாய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்தார். இந்த மசோதாக்கள் பெருநிறுவனங்களின் ஆதாயத்துக்காகக் கொண்டுவரப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Comments