தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தின் முதல் தவணை செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது - உயர்நீதிமன்றம்

0 2988

100 சதவீத கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்தித்த 9 பள்ளிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கல்விக் கட்டண முதல் தவணை செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்கவும் நீதிபதி மறுத்து விட்டார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை முதல் தவணையாக செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கட்டணம் வசூலித்தது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டு உள்ளதாகவும், அதில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஒன்பது பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தையும் செலுத்தும்படி வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த ஒன்பது பள்ளிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை என சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர் புகார் அளிக்க முன்வர மாட்டார்கள் என்பதால் தனியாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதுகுறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் மூலம் புகார்களை பெற்று அதன் அடிப்படையில் அக்டோபர் 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை வரும் 30 ஆம் தேதிக்குப் பின் நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments