கந்துவட்டி புகார்... மதுரை சலூன்கடைக்காரர் மோகன் தலைமறைவு!
கந்துவட்டி புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவி செய்து பிரபலமான சலூன்கடைக்காரர் மோகன் தலைமறைவாகியுள்ளார்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் கல்விச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்ச ரூபாயை கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்காக செலவழித்தார். மோகனின் இந்த நற்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
டெல்லியிலிருந்த பிரதமர் மோடி கூட மோகனைத் திரும்பிப் பார்த்தார். மே மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் மோகனைப் பிரதமர் மோடி பாராட்டவும் செய்தார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோகனைப் பாராட்டினார். இதைத் தொடர்ந்து, மோகன் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், மதுரை அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த செங்கை ராஜன் என்பவர் மருத்துவச் செலவுக்காக ரூ. 30 ஆயிரம் ரூபாயை மோகனிடம் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தை செங்கை ராஜன் திருப்ப செலுத்திய நிலையில் மேலும் அதிக வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் மோகன் மீது செங்கை ராஜன் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது சலூன் கடைக்காரர் மோகன் தலைமறைவாகியுள்ளார்.
Comments