இந்தியா - சீனா சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் எல்லையில் படைகளை இந்திய ராணுவம் குவித்து வருவதாக தகவல்
இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், இந்தியா படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக, திங்களன்று 6வது கட்டமாக இந்தியா - ராணுவ அதிகாரிகள் இடையே சுமார் 13 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது இந்தியா தரப்பில் 5 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனைத்து பிரிக்சன் பாயின்ட்களில் இருந்தும் சீன ராணுவம் முழுவதும் பின்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சீன தரப்பில் படைகளை முழுவதுமாக விலக்க வேண்டும், முதலில் சீன ராணுவம் தான் அத்துமீறியது என்பதால், முதலில் அவர்கள் தான் பின்வாங்க வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாங்காங், ஹாட்ஸ்பிரிங்ஸ், டெஸ்பங் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சீன படைகள் விலக வேண்டும் என்று இந்திய ராணுவம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
சீன தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், குளிர்காலத்திலும் இந்திய ராணுவம் தற்போதுள்ள இடங்களில் இருந்து பின்வாங்காமல் நிலைத்திருக்க தயாராக உள்ளது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை சமாளிப்பதற்காக, படைகளை இந்தியா ராணுவம் குவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments