ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் - பவானீஸ்வரர் கோயிலை பாதுகாக்க 28,000 மணல் மூட்டைகள் தயார்!

0 23426

வானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ள அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 28,000 மணல் மூட்டைகள் அடுக்கிப் பாதுகாப்பு அரண் அமைத்துள்ளனர் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது, பவானிசாகர் அணை. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் தற்போது நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளது. நீர் மட்டம் 102 அடியை எட்டினால் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும். இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2018 - ஆம் ஆண்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற பவானீஸ்வரர் கோயில் தெற்கு பிரகார சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் 63 நாயன்மார் சிலைகளும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து, கோயிலிலுக்குள் பக்தர்கள் சென்று வழிபாடு செய்யத் தடைவிதிக்கப்பட்டு, அலுவலகத்தில் உள்ள சிறிய அறையில் தற்போது பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பவானிசாகர் அணை நிரம்பி மீண்டும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு கோயிலுக்கு சேதம்  ஏற்படாமல் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெள்ளத்திலிருந்து கோயிலை பாதுகாக்க, ஆற்றை ஒட்டிய பகுதியில்  28 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கித் தடுப்பு அரண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் தெற்குப் பகுதியில் பிரதான சுவரை  விரைவில் கட்ட வேண்டும் என்பதே சத்தியமங்கலம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments