மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை... சந்தேகத்தால் இரு குழந்தைகள் நிராதரவான பரிதாபம்!

0 6640

ன்னியாகுமரி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தென்னை ஏறும் தொழிலாளி மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 39). தென்னை ஏறும் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  தங்கம் என்பவருக்கும் கடந்த 2009- ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ராஜசேகர் குடிப் பழக்கத்திற்கு அடிமையான  நிலையில் குடும்பம் வறுமையில் வாடி வந்துள்ளது. வாடகை வீட்டில் வசித்த நிலையில், கணவரின் வருமானம் கைகொடுக்கவில்லை. இதனால், தங்கம் அருகிலுள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். தங்கம் வேலைக்கு செல்லத் தொடங்கியது முதலே மனைவியின் நடத்தை மீது ராஜசேகர் சந்தேகமடைந்துள்ளார். மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவி தங்கத்திடம் ராஜசேகர் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று தங்கம் ஆலைக்கு சென்று மாலை வீடு திரும்பியதும், ராஜசேகர் மனைவீயிடம் இனி வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறி தகராற்றில்  ஈடுபட்டுள்ளார். தங்கம் அதற்கு மறுத்துள்ளார். நேற்றிரவு மகனும் மகளும் உறங்கிய பிறகு, வீட்டுக்கு வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த  மனைவி தங்கத்தை தேங்காய் வெட்ட பயன்படுத்தும் அரிவாளால் ராஜசேகர்   சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தங்கம் உயிரிழந்தார். பின்னர், ராஜசேகரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இரணியல் போலீசார் இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜசேகரின் செயலால் இப்போது மனைவியும் இறந்து விட குழந்தைகள் இருவரும் நிராதராவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலியான தாயின் உடலைப் பார்த்து குழந்தைகள் கதறி அழுதது காண்போரிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments