காகத்திற்கு கைகொடுக்கும் போக்குவரத்து சிக்னல்..! காக்காவையும் காக்கும் போலீஸ்
சென்னையில் அண்ணாசாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்கள், காகங்கள் கூடுகட்ட வசதியாக கைகொடுத்து உதவி வருகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
மரங்களில் கூடுகட்டி வாழும் காகங்களுக்கு மரங்களில்லாத சென்னை அண்ணாசாலையின் முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து காவல்துறையின் சிக்னல் கம்பங்கள் கூடுகட்டிக் குடித்தனம் நடத்தும் இடமாகி இருக்கின்றன.
நகரின் பல்வேறு பகுதிகளில் முன்பிருந்த வீடுகள் காலப்போக்கில் வர்த்தகக் கட்டடங்களாக மாறிவிட்டநிலையில், உணவகங்களில் மிச்சமீதியை தேடிச்சென்று உண்ணும் காகங்களோ, மரங்களைத் தேடி தொலை தூரம் செல்ல மனமின்றி அருகில் உள்ள சிக்னல் கம்பங்களில் கூடுகட்டி வாழ தொடங்கி உள்ளன.
அண்ணாசாலை - வாலாஜா சாலை சந்திப்பில் அமைந்துள்ள சிக்னல் கம்பங்களின் இரு புறமும் சில காகங்கள் கூடுகட்டி குடித்தனம் நடத்திவருகின்றன.
நள்ளிரவு நேரங்களில்கூட எரியவிடப்படும் சிக்னல்கள் வாகன ஓட்டிகளுக்கு இம்சை என்றால் பகல் நேரங்களில் அவ்வப்போது எரியும் சிக்னல் விளக்குகளால் கூடுதல் இம்சை..! என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
காக்கை, குருவி எங்கள் ஜாதி என்பதில் இங்கே யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை அதற்காக காக்கையும் குருவியும் தங்கிச்செல்ல வசதியாக சாலையோரம் மரங்கள் வளர்ப்பதை விட்டு சிக்னல் கம்பங்களிலும், மின் கம்பங்களிலும் கூடுகட்டுவதை வேடிக்கை பார்ப்பது பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம்..!
Comments