பவானி ஆற்றில் வெள்ளம் - கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை..!
பில்லூர் அணையில் இருந்து தொடர்ந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
100 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கும் பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் வருகிறது. பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 9 ஆயிரம் கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 2வது நாளாக நீடிக்கிறது.
72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவு தண்ணீரை கொண்டுள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையின் 2 மதகுகள் வழியாக விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையில் 117.80 அடி உயரத்துக்கு நீர் நிரம்பியுள்ளது. வினாடிக்கு 2410 கன அடி வீதம் நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் பயன்பாட்டுக்காக 516 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அடவி நயினார் நீர்தேக்கம் இரண்டாவது முறையாக நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. கடையம் ராமநதி, கடனா நதி, கருப்பா நதி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
Comments