கடன் தராத வங்கி... ஆளுநர், முதல்வரை மொய் விருந்துக்கு அழைத்த இளைஞர்!
தஞ்சாவூர் அருகே சுய தொழில் தொடங்க வங்கிகள் கடன் தராததால், அரசியல் தலைவர்கள் புகைப்படங்களுடன் பேனர் வைத்து மொய் விருந்து வைக்க முயன்றவரை போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தால் அருகேயுள்ள அம்மன் பேட்டையைச் சேர்ந்தவர் நீலமேகம். பிகாம் பட்டதாரியான இவர் கல்வி செலவுக்காக ஏற்கெனவே வங்கிகளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத நிலையில் சென்ட்ரிங் வேலை பார்த்து வரும் இவரால் கல்விச் செலவுக்காக வாங்கிய கடனை அடிக்க முடியவில்லை. இந்நிலையில், சுயமாக சென்ட்ரிங் தொழில் தொடங்குவது தொடர்பாக நீலமேகம் கடன் உதவி கேட்டு வங்கிகளை அணுகியுள்ளார். முறையான ஜாமீன் இல்லாமல் கடன் வழங்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதையடுத்து, திருப்பனந்தாளில் சுய தொழில் தொடங்க நிதி திரட்டும் வகையில் மொய் விருந்து நடத்த முடிவு செய்தார். தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை அச்சிட்டு மொய் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்து பெரிய பேனர்களையும் வைத்திருந்தார். மேலும், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாத சம்பளத்தில் ஒரு பகுதியைத் தனக்குக் கொடுத்து தொழில் தொடங்க உதவும் படியும் பேனர்களில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தகவல் திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்குத் தெரிய வர சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மொய் விருந்து தொடர்பான பேனர்களை அகற்றினர். மேலும், நீலமேகத்திடம் விசாரணை நடத்தி இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரித்து அனுப்பினர்.
Comments