வேளாண் மசோதாக்கள் எதிர்ப்பும்.. ஆதரவும்

0 1090
வேளாண் மசோதாவுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு சாதகமான பல அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றிருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன

வேளாண் மசோதாவுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு சாதகமான பல அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றிருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, ஆகியவை நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசின் இந்த மசோதாக்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும், நிலவுடமை விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படும் என்றும், எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானா மாநிலத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் டிராக்டர் ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டது.

அம்பாலாவில் உள்ள சாதோபூரில் அறிவுறுத்தலையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் என்ற அமைப்பின் கீழ், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த அமைப்பு வரும் 24ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தையும் அறிவித்து உள்ளது.

அதேசமயம், மண்டியைத் தவிர்த்து நல்ல விலை கிடைத்தால் நேரடியாக வியாபாரிகளிடமும், விளைபொருட்களை விற்க வழிவகை செய்வதால் பல விவசாய அமைப்புகள் இந்த மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தென் மாநிலங்களிலும் இதே நிலையே காணப்படுகிறது.

மேலும், குறைந்தபட்ச ஆதார விலை முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் தொடரும் என்றும், அரசு அளித்துள்ள உத்தரவாதம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments