மாநிலங்களவையில் அமளிக்கு இடையே 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்

0 2256
மாநிலங்களவையில் அமளிக்கு இடையே 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்

மத்திய அரசின் 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டுள்ளன. அப்போது எதிர்க்கட்சிகளின் அமளியால் விதி புத்தகம் கிழித்தெறியப்பட்டதோடு, அவைத் தலைவர் இருக்கை அருகே இருந்த மைக்கும் சேதமடைந்தது.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவைக்கு வந்தன.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மசோதாக்கள் மீது விவாதம் நடந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விளக்கி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். காரசாரமாக நீடித்த இந்த விவாதம் மதியம் வரை நீடித்தது.

மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக்கோரி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரையன், திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர் தீர்மானங்களை கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், 2 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், விவசாயிகள் விவசாய பணியாளர்களாக மாறும் நிலை ஏற்படும் என்றார். விவசாயிகளின் நிலங்கள், மிகப்பெரிய வணிக நிறுவனங்களால் எடுக்கப்பட்டு விடும் அபாயம் இருப்பதாகவும் எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் குற்றம்சாட்டினார்.

திமுக எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் பேசியபோது, 2 மசோதாக்களும் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறினார். அதன்பின்னர், விவாதத்திற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசினார். அப்போது விவாதத்தை இன்றுடன் முடித்துக்கொள்ளக்கூடாது, நாளையும் நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் அமைச்சரின் பதிலுரையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து குரல் வாக்கெடுப்பு நடத்த துணைத்தலைவர் ஹரிவன்ஸ் நடவடிக்கை எடுத்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர்.தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், சபாநாயகரின் இருக்கைக்கு அருகே சென்று அங்கிருந்த அவை விதி குறிப்பு புத்தகத்தை கிழித்து எறிந்தார். அப்போது சபாநாயகரின் மைக்கும் சேதமடைந்தது.

கடும் அமளியால் மாநிலங்களவை பத்து நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போதும் அமளி ஓயவில்லை. ஆனாலும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் வேளாண் மசோதாக்கள் இரண்டும் நிறைவேற்றப்படுவதாகவும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிரகரிக்கப்படுவதாகவும் துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் அறிவித்தார்.

மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவை நாளை காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக ஹரிவன்ஸ் அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments