வேளாண் மசோதாக்களுக்கு மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பா? -அதிமுக மீது மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு மக்களவையில் ஆதரவு அளித்துவிட்டு, மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பது நகைச்சுவையாக இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டிள்ளார்.
அந்த மசோதாக்களை, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும், 13 கட்சிகளும் எதிர்ப்பதாகவும், ஆனால் அ.தி.மு.க. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்க வழி இருக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வது அப்பட்டமான பொய் என்றும், அந்த மசோதாக்கள் மாநிலத்திற்குள் நடைபெறும் உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அனைத்திற்கும் ஆபத்தானவை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் பாதுகாப்பு தேவை என்பதற்காக மசோதாக்களை ஆதரித்ததாக தெரிவித்து, தமிழக விவசாயிகளிடம், முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் திமுக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments