மாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை - வாகனத் திருடனாக மாறிய மகன்!

0 7541
கைதான சரவணகுமார்

மாமியார் மருமகள் சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மகன் வாகனத் திருடனாக மாறிய சம்பவம் திருச்சியில்  அரங்கேறியுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி, ஸ்ரீரங்கம், கே.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடை மற்றும் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி களவு போயின. வாகனங்களை இழந்த பொதுமக்கள் அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாகத் துணை ஆணையர் வேதரத்தினம் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளியைத் தேடினர்.

இந்த வழக்கு தொடர்பாக, கே.கே. நகரைச் சேர்ந்த 33 வயதாகும் சரவணகுமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவன் திருடனாக மாறிய தகவலைத் தெரிவித்துள்ளான்.

சரவணகுமாருக்குத் திருமணமாகி மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அவனது தந்தைக்குச் சொந்தமாக இரு வீடுகளும், மளிகைக் கடையும் கூட உள்ளது. சொந்த மளிகைக் கடையைக் கூட கவனித்துக்கொள்ளாமல், ஊர் சுற்றித்திரிந்தார் சரவணகுமார். சரவண குமார் குடும்பமும், அவனது பெற்றோர் குடும்பமும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சரவணகுமாரின் பொறுப்பற்ற தன்மை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக சரவணகுமாரின் தாயாருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சரவண குமார் திருந்துவான் என்று பொருத்துப்பார்த்த பெற்றோர், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சரவணகுமாரையும் அவனது மனைவியையும் வீட்டைவிட்டு வெளியேற்றினர். தனியாக வாழ்ந்த சரவணகுமார் பணமின்றி தவித்துள்ளான். அதனால், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டுள்ளான்.

இதையடுத்து, சரவண குமாரிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 17 இருசக்கர வாகனங்களை மீட்கப்பட்டதுடன் சரவணகுமார் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். மேலும், வாகன உரிமையாளர்களிடம்  வாகனங்களை ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் வேதரத்தினம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.  இந்தத் திருட்டு வழக்கில் விரைந்து செயல்பட்ட காவல்துறையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments