அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் மாதிரி தேர்வில் தொழில்நுட்ப கோளாறு-மாணவர்கள் அவதி
அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி பருவ மாணவர்களுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணிசமான மாணவர்கள் பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அதன் இணைப்பு கல்லூரிகளில் வருகிற 24-ம் தேதி முதல் ஆன்லைனில் இறுதி பருவ தேர்வுகள் நடைபெறுகின்றன. அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, 2 நாட்களுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த நிலையில், வெவ்வேறு பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு 4 கட்டங்களாக ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏறக்குறைய 40 சதவீதம் மாணவர்கள் மாதிரி தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. log in செய்யும் போதே இணையதள பக்கம் பாதியிலேயே நின்று விடுவதாகவும், வினாத்தாள்களை விரைந்து பதிவிறக்கம் செய்யமுடியவில்லை என்றும் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.
மொபைல் போனில் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்ததாகவும், மடிக்கணினியில் எழுதும் மாணவர்களுக்கு ஓரளவுக்கு சர்வர் வேலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
செமஸ்டர் தேர்வு அன்று இதே போன்று தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க பேராசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று, கடந்த வெள்ளிக்கிழமை சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறவிருந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments