நீலமலை ரயிலுக்காக களமிறங்கிய பொன்மலை... 90 ஆண்டுகால வரலாற்றில் நீராவி இன்ஜீன் தயாரிப்பு!

0 3066

மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வந்தாலும், தற்போதும் பழங்கால நீராவி இன்ஜீனையும் இந்தியாவில் தயாரித்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்திலும் நீராவி இன்ஜீனா ஏன்... எதற்கு என்று கேள்வி எழுகிறதல்லவா... அதற்கான பின்னணியை பார்ப்போம்!

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே அடையாளமாக திகழ்வது உதகை குட்டி மலை ரயில். இந்தியாவில் உதகை , டார்ஜிலிங் நகரங்களில்தான் இந்த குட்டி மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை வரை சென்று வருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுர் வரை நீராவி இன்ஜீன் மூலமும் அங்கிருந்து உதகை வரை பயோடீசல் இன்ஜீன் மூலம் மலை ரயில் இயக்கப்படுகிறது. உதகை என்றாலே, இந்த குட்டி ரயில்தான் முதலில் சுற்றுலாப்பயணிகளுக்கு நினைவுக்கு வரும். யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த ரயில் கடந்த 1908 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷார் காலத்தில் முதன் முதலாக இயங்க தொடங்கியது. அப்போது, இந்த ரயிலுக்கான இன்ஜீன்கள் சுவிட்சர்லாந்திலிருந்து தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.

தற்போது, 90 ஆண்டுகளில் முதன்முறையாக திருச்சி பொன்மலை பணிமனையில் நீல மலை ரயிலுக்கான புதிய நீராவி இன்ஜீன் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்துடன் 900 குதிரைத் திறனுடன் உருவாகும் இந்த இன்ஜீனில் நிலக்கரி எரிபொருளாக பயன்படும். இன்ஜீனுக்கான பாய்லர்கைள் மற்றும் சிலிண்டர்கள் திருச்சி மற்றும் கோவையில் உள்ள தனியார் நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. ஒரு ரயில் இன்ஜீனை தயாரிக்க ரூ. 8 கோடி செலவாகும்.

புதிய மலை ரயில் இன்ஜீன் 97.6 டன் எடை வரை இழுக்கும்திறன் கொண்டது. சுமார், 4500 லிட்டர் கொள்ளவு கொண்ட வாட்டர் டேங்க், மற்றும் 3.1 டன் நிலக்கரியை ஸ்டோரேஜ் செய்யக் கூடிய நிலக்கரி டேங்குடன் புதிய இன்ஜீன் உருவாகிறது. இந்த நீராவி இன்ஜீனை இயக்கும் போது, மலைக்கு மேலே ஏறும்் போது 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் கீழே இறஞ்கும் போது 1600 லிட்டரும் தண்ணீரும் செலவாகும். ஒரு முறை பயணம் மேற்கொள்ள 3 டன் நிலக்கரி தேவைப்படும்.

புதிய இன்ஜீன் தயாரிக்கும் பணிகள் சுமார் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்டு உதகை கொண்டு வரப்படும் என்றும் பொன்மலை பணிமணையின் முதன்மை மேலாளர் ஸ்யாமதர் ராம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments