பெண் ஊழியரை உயிரோடு எரிக்க முயன்ற சைக்கோ கணவன்..! கதவை உடைத்து மீட்ட காட்சிகள்

0 5861
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, நீதிமன்றப் பெண் ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அரிவாளால் வெட்டி சித்ரவதை செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற கொடூரக் கணவனை, கதவை உடைத்து காவல்துறையினர் சுற்றிவளைத்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, நீதிமன்றப் பெண் ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அரிவாளால் வெட்டி சித்ரவதை செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற கொடூரக் கணவனை, கதவை உடைத்து காவல்துறையினர் சுற்றிவளைத்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுவில் பகுதியை சேர்ந்த 53 வயதான சுரேஷ் ராஜனுக்கும், அவரது மனைவி 40 வயதான ஹெப்சிபாய்க்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை குழந்தைகள் இல்லை...!

இந்நிலையில், ஹெப்சி பாய் கடந்த 2-ந் தேதி இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். மனைவி ஹெப்சிபாய் வீட்டுக்குள் வந்ததும் கதவை உள்பக்கமாக பூட்டிவைத்து, வெளியில் என்ன நடந்தது ? யாரிடமெல்லாம் பேசினாய்? என சந்தேகத்துடன் கேட்டு சைக்கோ போல அடித்து உதைப்பதை சுரேஷ்ராஜன் வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. ஹெப்சிபாய் அரசுப் பணியில் சேர்ந்த பின்னர் இந்த சந்தேகம் அதிகமாகியுள்ளது.

சம்பவத்தன்று, வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் உள்ளேயிருந்து ஹெப்சிபாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டிய சிறிது நேரத்தில் ஹெப்சியின் சத்தம் சுத்தமாக அடங்கியது. வீட்டுக்குள் இருந்து பெட்ரோல் வாடை வீசியதால் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த குளச்சல் காவல்துறையினர் அக்கம் பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து கதவை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தனர். உள்ளே கையில் அரிவாள் கத்தியுடன் சுரேஷ்ராஜன் நிற்க, எதிரே நாற்காலியில் உடல் முழுவதும் கயிற்றால் சுற்றிக் கட்டப்பட்டு திமிறிக் கொண்டிருந்தார் ஹெப்சிபாய். அவரது கை, கால், கண், வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டிருந்தது.

அக்கம்பக்கத்தினரைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த அரிவாளை தூக்கிப் போட்டுவிட்டு, தனக்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லாதது போல சட்டையில்லாமல் நின்றான் சைக்கோ சுரேஷ்ராஜன். உடனடியாக அவரது கட்டுக்கள் அவிழிக்கப்பட்டன. ஹெப்சிபாயின் காலில் அரிவாளால் வெட்டப்பட்ட காயம் இருந்தது, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றப்பட்டிருந்தது.

நீதிமன்றப் பணிக்கு சென்ற பின்னர் ஹெப்சிபாயை பின்தொடர்ந்து சென்று, அவர் யார் யாருடன் பேசுகிறார் என்பதை நோட்டமிட்டு வீடு திரும்புவதை வழக்கமாகிய சுரேஷ்ராஜன், குழந்தை இல்லை என்ற குறையை மறைக்க மனைவியை சந்தேகப்பட்டு சித்ரவதை செய்வதை வாடிக்கையாகியுள்ளான். இந்த நிலையில் மனைவியை கட்டிவைத்து அரிவாளால் வெட்டியபோது அவர் அலறியதால் உடனடியாக வாயில் துணியை கட்டியதோடு, அவரை எரித்துக் கொல்லும் திட்டத்துடன் கண்ணையும் கட்டி பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதும் தெரியவந்தது.

சரியான நேரத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றதால் ஹெப்சிபாயை உயிரோடு மீட்க முடிந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சைக்கோ சுரேஷ்ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாலிகட்டிய மனைவியை இத்தனை கொடூரமாகச் சித்ரவதை செய்து கொலை செய்ய முயன்ற சைக்கோ கணவனின் வெறிச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments