போலி கால் சென்டர் மோசடி... கும்பலைப் பிடித்த தனிப்படை

0 2601
போலி கால் சென்டர் மோசடி... கும்பலைப் பிடித்த தனிப்படை

ஆன்லைனில் வங்கி கடன் வழங்குவதாக கூறி, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று நூதன முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்து வந்த கும்பலை சென்னை தனிப்படை போலீசார் நாமக்கல்லில் பிடித்துள்ளனர். 

வங்கிக்கு வர தேவையில்லை...கேட்கும் ஆவணங்களை கொடுத்தால் போதும் வங்கி கடன், உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும் என ஆசை வலை விரிப்பது தான் இந்த மோசடி கும்பலின் பாணி. வேலை தேடி அலையும் இளைஞர்களும், இளம்பெண்களும் தான் இவர்களது பகடைக் காய்...

இந்த மோசடி கும்பலின் பேச்சை நம்பி, சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் பணத்தை இழந்ததால் அடையாறு சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடந்த 9-ம் தேதி டாட்டா கேப்பிட்டல் என்ற நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒரு பெண் செல்போனில் அழைத்ததாகவும், தனிநபர் கடன் இரண்டு லட்ச ரூபாய் வரை ஆன்லைன் மூலமாகவே வழங்குவதாக கூறியதை நம்பி, ஆதார் ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை வாட்ஸ் அப் மூலம் பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் வங்கி கடன் உறுதியானதற்கான ஓ.டி.பி-யை கேட்டதை அடுத்து அதை தெரிவித்ததால் தனது வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக திருடப்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்பு கொண்ட அந்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து தேடுகையில், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் போலி கால் சென்டர் மூலமாக பொதுமக்களை தொடர்பு கொண்டு மோசடி செய்யும் கும்பல் என்பதை அறிந்தனர். இதையடுத்து சென்னை அடையாறு சைபர் பிரிவு போலீசார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விரைந்து, "பெதர் லைட் டெக்" என்ற அந்த போலி கால் சென்டரில் நுழைந்து அந்த கும்பலின் தலைவன் மற்றும் அந்த போலி கால் சென்டரில் பணிபுரியும் இளம் பெண்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 8000 முதல் 15 ஆயிரம் வரை மாத சம்பளம் தருவதாக கூறி பலரையும் இந்த போலி கால் சென்டரில் பணி புரிய வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதில் பணிபுரிந்த பெண்கள் பலர் தெரிந்தும் தெரியாமலும் இந்த போலி கால்சென்டர் மோசடியில் சிக்கியுள்ளனர். 17 வயதான சிறுமிகளை அவர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி வேலைக்கு அமர்த்தி, பொதுமக்களிடம் பேச பயிற்சியளித்து பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய குமரேசன், விவேக் மற்றும் 3 பெண்கள் என ஐந்து பேரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான குமரேசன் எவ்வாறு இந்த மோசடியை அரங்கேற்றினார் என்பதை வாக்கு மூலமாக அளித்துள்ளார்.

நேரில் செல்லாமல் போன் மூலமாகவே எளிதில் கடன் பெற விரும்பும் நபர்களை ஆசை வலையில் வீழ்த்தி, அவர்களது ஆதார் அட்டை, புகைப்படம், டெபிட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாட்சப் மூலம் பெற்றுள்ளனர். அதனை வைத்து அவர்களுக்கு தெரியாமல், அவர்களது பெயரிலேயே ஆன்லைன் மூலமாகவே கோடக் மகேந்திரா, ஐ சி ஐ சி ஐ வங்கியில் கணக்கு துவங்கியுள்ளனர்.

Know your customers எனும் படிவம் கட்டாயம் என்ற விதியை கூட பின்பற்றாமல் வங்கி ஊழியர்கள் சிலரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர். ஒடிபி வாயிலாக டெபிட் கார்டு மூலம் பணத்தை திருடியுள்ளனர். சந்தேகம் வராமல் இருப்பதற்காக, பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை, அவர்கள் பெயரில் புதிதாக துவங்கப்பட்ட வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்து, பின்னர் அதிலிருந்து கூகுள் பே மற்றும் ஆன்லைன் கேமிங்கில் முதலீடு செய்து பணத்தை எடுத்துள்ளனர்.

இவர்களால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து சென்னை தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் சென்னைக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துரிதமாக செயல்பட்டு மோசடி கும்பலை கூண்டோடு பிடித்த அடையாறு தனிப்படை போலீசாரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். இது போன்ற நபர்கள் கடன் தருவதாக கூறும் போலி வாக்குறுதியை நம்பி பணத்தை இழந்து விடாதீர்கள் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments