திருவள்ளுவர் பல்கலையின் செமஸ்டர் திருவிளையாடல்..! வினாக்கள் மாறியதால் குழப்பம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட இறுதி செமஸ்டருக்கான பிசிக்கல் கெமிஸ்ட்ரி பாட தேர்வில், தவறுதலாக அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி பாடத்தில் இருந்து 38 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். பார்த்து எழுதிய மாணவர்களை கூட தவிக்க விட்ட விகடகவி வினாத்தாள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழக மாணவர்கள் வீட்டில் இருந்து செமஸ்டர் தேர்வை எழுதி பல்கலைகழகத்தில் வந்து வினாத்தாளை கொடுத்துச்செல்லும் வினோத முறையில் தேர்வு நடந்து வருகின்றது.
அதன்படி மாணவர்களின் வாட்ஸ் அப், மற்றும் பல்கலைகழகத்தில் இணைய தளத்தில் இருந்து வினாத்தாளை 30 நிமிடத்திற்கு முன் கூட்டியே பதிவிறக்கம் செய்யும் முறை அமலில் உள்ள நிலையில் கடந்த 16 ந்தேதி நடந்த தேர்வின் போது தேர்வு தொடங்கி 45 நிமிடம் கழித்து தான் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய முடிந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிசிக்கல் கெமிஸ்ட்ரி தேர்வுக்கான வினாத்தாள் சரியான நேரத்தில் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 75 மதிப்பெண்ணுக்கு கேட்கப்பட்ட வினாத்தாளில் 38 மதிப்பெண்ணுக்கு வேறு பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
அதாவது தற்போது 6 வது செமஸ்டர் பிசிக்கல் கெமிஸ்ட்ரி எழுதும் மாணவர்களுக்கு, 5 வது செமஸ்டரில் உள்ள அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதன்படி 2 மதிப்பெண் வினாக்கள் நான்கும், 5 மதிப்பெண் வினாக்கள் இரண்டும், 10 மதிப்பெண் வினாக்கள் இரண்டும் என மொத்தம் 38 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட அவுட் ஆப் சிலபஸ் கேள்விகளுக்கு என்ன பதில் எழுதுவது ? என்று தெரியாமல் மாணவர்கள் கடும் தவிப்புக்குள்ளாயினர்.
இதில் உச்சக்கட்ட வேடிக்கை என்னவென்றால் பிசிக்கல் கெமிஸ்ட்ரி புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதி முழு மதிப்பெண் பெறும் திட்டத்துடன் வீட்டில் உற்சாகமாக அமர்ந்திருந்த மாணவர்களால் கூட அந்த கேள்விகளுக்கு பதில் எழுத இயலவில்லை என்பது தான் சோகம்..!
இது தொடர்பாக பல்கலைகழக நிர்வாகத்திடம் கேட்ட போது, தவறாக கேட்கப்பட்ட கேள்விகளை எழுத முயற்சித்திருந்தால் போதும் அவர்களுக்கு அந்த கேள்விக்குறிய முழு மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்றும் வினாத்தாளில் எப்படி குழப்பம் ஏற்பட்டது ?என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல்கலைகழகங்கள் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன முறையில் தகுந்த கண்காணிப்புடன் தேர்வுகளை நடத்தாமல் ஒப்புக்கு நடத்தப்படும் தேர்வுக்கு செய்யும் அத்தனை செலவுகளும் வீண் என்பதற்கு இந்த வினாத்தாள் குழப்பமே சிறந்த உதாரணம்.
Comments