தடங்கலுக்கு வருந்துகிறோம்..! சென்னை பல்கலை லக.. லக..! கேள்வி கேட்க இயலாத பரிதாபம்
சென்னை பல்கலைகழகம், முன்கூட்டியே ஆன் லைனில் தேர்வு ஒத்திகை பார்ப்பதற்காக இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களை கணினி முன்பு தயார் படுத்திய நிலையில் இணையவழியில் ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய இயலாததால் ஒத்திகையை கைவிட்டது.
அண்ணாபல்கலைகழகம் தனது மாணவர்களுக்கு நவீன முறையில் கேமரா கண்காணிப்புடன் தேர்வுகளை நடத்த தயாராகி வருகின்றது.
இந்த நிலையில் சென்னையின் பழைமையான பல்கலைகழகங்களில் முக்கியமான சென்னை பல்கலைகழகமோ, தேர்வுக்கு 30 நிமிடத்திற்கு முன் கூட்டியே வினாத்தாளை தங்கள் இணையத்தில் வெளியிட்டு அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து எழுதும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
தங்கள் பல்கலையில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை ஆன் லைனில் மாதிரி தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பும் ஒத்திகை நடத்த திட்டமிட்டிருந்த பலகலைகழக நிர்வாகம், மாணவர்களை கணினி முன்பு காத்திருக்க கேட்டுக் கொண்டனர்.
மதியம் 2 மணிக்கு வர வேண்டிய மாதிரி வினாத்தாள் மாலை 4 மணியை கடந்தும் இணையத்தில் வெளியாகாததால் மாணவர்கள் காத்திருந்து நொந்து போயினர். மாறாக வினாத்தாளுக்கு பதிலாக தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று எண்டு கார்டு போட்டு மாதிரி தேர்வை ஒத்தி வைத்தது சென்னை பல்கலைகழகம்.
இந்த சிக்கலான ஒத்திகை மாணவர்களை கலங்க வைத்துள்ளது என்றும் தேர்வு நாளன்றும் இதே போல வினாத்தாள் வெளியாவதில் குளறுபடி ஏற்பட்டாமலும், அதையும் மீறி ஏற்பட்டாலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க மாற்று ஏற்பாடுகளை பல்கலைகழக நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன் லைன் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்கள் பகுதியில் இணைய வழி சேவையின் வேகத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இல்லையேல் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று சுட்டிக் காட்டுகின்றனர் கல்வியாளர்கள்.
Comments