வேளாண் சட்ட மசோதாக்கள்: மாநிலங்களவையில் நாளை தாக்கல்

0 1456
வேளாண் சட்ட மசோதாக்கள்: மாநிலங்களவையில் நாளை தாக்கல்

விளைபொருள், விவசாயிகள் பாதுகாப்பு உள்ளிட்ட 3 வேளாண் மசோதாக்கள், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை மாநிலங்களவையில் தாக்கலாகிறது. இந்த மசோதாக்களில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்றியமையாப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா, உழவர்களின் விளைபொருள் வணிக மசோதா, விலை உத்தரவாதத்துக்கான உழவர் உடன்பாடு மற்றும் வேளாண் பணிகள் மசோதா ஆகியவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்போது பேசிய, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த மசோதாக்களால், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் முறைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.

இந்தச் சட்டங்கள் மாநில அரசுகளின் வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுச் சட்டங்களைப் பாதிக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

வேளாண் விளைபொருள், உழவர்கள் தொடர்பான 3 அவசரச் சட்டங்கள் ஜூன் 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டதில் இருந்தே பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றியமையாப் பொருட்கள் சட்டத் திருத்தத்தின் மூலம் வேளாண் விளைபொருட்களின் விளைச்சல், வழங்கல், வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடைக்கிறது.

பஞ்சம், போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட காலங்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றின் விநியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். இன்றியமையாப் பொருட்களின் இருப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடைக்கும்.

பொது வழங்கல் முறையில் உள்ள பொருட்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. வேளாண் விளைபொருட்களை உழவர்கள் கட்டுப்பாடின்றி யாரிடமும் விற்பனை செய்யலாம்.

வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுச் சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்கிற கட்டுப்பாடு இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. விவசாயிகள் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களைத் தாண்டி மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களிடையேயும் பொருட்களைக் கட்டுப்பாடின்றி விற்பனை செய்ய, வேளாண் மசோதாக்கள் மூலம், வழிவகை ஏற்பட்டிருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments