வேளாண் சட்ட மசோதாக்களின் முக்கிய அம்சங்கள்...

0 8129
வேளாண் சட்ட மசோதாக்களின் முக்கிய அம்சங்கள்...

வேளாண் விளைபொருள், உழவர் பாதுகாப்பு தொடர்பாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டங்களின் முக்கியமான அம்சங்களை பார்க்கலாம்...

இன்றியமையாப் பொருட்கள் சட்டத் திருத்தத்தின் மூலம் வேளாண் விளைபொருட்களின் விளைச்சல், வழங்கல், வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடைக்கிறது.

பஞ்சம், போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட காலங்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றின் வழங்கலை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். இன்றியமையாப் பொருட்களின் இருப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடைக்கும்.

பொது வழங்கல் முறையில் உள்ள பொருட்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. வேளாண் விளைபொருட்களை உழவர்கள் கட்டுப்பாடின்றி யாரிடமும் விற்பனை செய்யலாம். வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுச் சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்கிற கட்டுப்பாடு இதன் மூலம் தகர்க்கப்படுகிறது.

எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், சணல், பருத்தி நூல், பழங்கள், காய்கறிகள், தானியங்களின் விதைகள், கால்நடைத் தீவன விதைகள், பருத்திக்கொட்டை ஆகியன இன்றியமையாப் பொருட்களின் பட்டியலில் உள்ளன. பஞ்சம், போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட அசாதாரணச் சூழலில் மட்டுமே இவற்றின் இருப்பு வைக்கும் அளவை மத்திய அரசு கட்டுப்படுத்தும்.

மற்ற காலங்களில் கட்டுப்பாடின்றி இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்பதால் உழவர்களுக்கு அதிக விலை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

வேளாண் விளைபொருள் வணிகச் சட்டத் திருத்தத்தின்படி விவசாயிகள் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களைத் தாண்டி மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களிடையேயும் பொருட்களைக் கட்டுப்பாடின்றி விற்பனை செய்ய அனுமதிக்கிறது. ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு வெளியே விளைபொருட்களுக்கு எந்தவித வரியையும் மாநில அரசு விதிக்க முடியாது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments